கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி


கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 48 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 48 பேரை போலீசார் கைது செய்தனர்.

கவர்னர் கோவை வந்தார்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஓய்வு எடுப்பதற்காக கடந்த 7-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அவர் கார் மூலம் ஊட்டி சென்றார். அங்கு தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை ஊட்டியில் இருந்து கார் மூலம் கோவை நோக்கி வந்தார்.

இந்த நிலையில், கோவை வரும் கவர்னருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அந்த கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில் நிர்வாகிகள் கோவை -அவினாசி ரோடு சித்ரா சிக்னல் அருகே கருப்பு கொடியுடன் திரண்டனர்.

48 பேர் கைது

உடனே அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார், கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்றதாக அந்த கட்சியை சேர்ந்த 48 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவஞானம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் கனக ராஜ், மனோகரன், எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து சி.பத்மநாபன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒப்புதல் அளிக்கவில்லை

தமிழக கவர்னர், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக பேசி வருகிறார். காரல்மார்க்ஸ் தொடர்பாக தவறான தகவலை கூறிய அவர், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை செய்யும் மசோதாவுக்கு அனுமதி கொடுக்கவில்லை.

எனவே தமிழகத்தில் கவர்னர் எந்த பகுதிகளுக்கு செல்கிறாரோ அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி எங்கள் கட்சி சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story