கோழிக்கடைக்காரரிடம் பணம் பறிக்க முயற்சி

கோழிக்கடைக்காரரிடம் பணம் பறிக்க முயற்சி
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் தர்மராஜ்(வயது 22). அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பழனி அண்ணா நகரை சேர்ந்த குருநாதன்(32) வந்தார். பின்னர் தன்னை சுகாதார ஆய்வாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு கோழிக்கடையில் விதிகளை பின்பற்றவில்லை எனக்கூறி சீல் வைக்க போவதாக தர்மராஜை மிரட்டினார். மேலும் அதை தவிர்க்க வேண்டுமென்றால் ரூ.2,500 லஞ்சம் தர வேண்டும் என்று கூறினார். இதற்கு பயந்துபோன தர்மராஜ் ரூ.500 ஆயிரம் மட்டும் கொடுத்தார். மேலும் ரசீது கேட்டார். ஆனால் அதை கொடுக்காமல், பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு குருநாதன் தப்பிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த தர்மராஜ் தனது நண்பர்களுடன் அவரை தேடினார். அப்போது, காளியாபுரம் பிரிவு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த குருநாதனை பிடித்து, அந்த வழியாக ரோந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் தலைமையிலான ஆனைமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், குருநாதன் சுகாதார ஆய்வாளர் இல்லை என்பதும், பணம் பறிக்க மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






