கனிமவளங்களை வெட்டி கடத்த முயற்சி
ஆனைமலை அருகே பட்டா நிலத்தில் கனிமவளங்களை வெட்டி எடுத்து கடத்த முயற்சி நடந்தது. இது தொடர்பாக லாரி, பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனைமலை
ஆனைமலை அருகே பட்டா நிலத்தில் கனிமவளங்களை வெட்டி எடுத்து கடத்த முயற்சி நடந்தது. இது தொடர்பாக லாரி, பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.
கனிம வளங்கள் கடத்தல்
ஆனைமலை பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் கனிம வளங்கள் வெட்டி எடுத்து லாரிகள் மூலம் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக சப்-கலெக்டருக்கும், தாசில்தாருக்கும் புகார்கள் சென்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தாசில்தார் ரேணுகாதேவி தலைமையில் மண்டல துணை தாசில்தார் கருப்பசாமி, வருவாய் அதிகாரி பிரகாஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அசோக் ஆகியோர் ஆனைமலை அருகே திவான்சாபுதூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பறிமுதல்
அப்போது அங்குள்ள பட்டா நிலத்தில் மயில்சாமி என்பவர் பண்ணை குட்டை அமைக்க அனுமதி பெற்றுவிட்டு மண், கற்களை வெட்டி எடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் ஏற்றி கேரளாவிற்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு, தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.