மேலப்பழுவூர் கிராமத்தில் காசநோய் விழிப்புணர்வு
மேலப்பழுவூர் கிராமத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலப்பழுவூர் கிராமத்தில் வட்டார பொது சுகாதாரத்துறை சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அழகேசன், சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், இசக்கியேல் விவின் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தினர். இதில் காசநோய் எளிதில் குணப்படுத்தக்கூடியது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
6 மாதம் சிகிச்சை மேற்கொண்டால் முற்றிலும் குணமடையலாம். மேலும் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் கிராமம் கிராமமாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டு உடனடியாக தேவைப்படுவோருக்கு சிகிச்சை வழங்கப்படும். சிகிச்சையின் போது தகுதியுள்ளோருக்கு மாதம் ரூ.500 ஊட்டச்சத்து உணவுக்காக வழங்கப்படுகிறது. 2025-க்குள் காசநோய் இல்லாத நாடாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக்கூறப்பட்டது. மேலும் போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களிடத்தில் எடுத்துக் கூறப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் ஏராளமாேனார் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.