யானைகள் தண்டவாளத்தை கடக்க சுரங்கப்பாதை
கோவை அருகே வனப்பகுதியில் காட்டு யானைகள் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க ரூ.7½ கோடியில் 2 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
கோவை அருகே வனப்பகுதியில் காட்டு யானைகள் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க ரூ.7½ கோடியில் 2 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
காட்டு யானைகள் சாவு
கோவை-கேரளா இடையே ரெயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கஞ்சிக்கோடு, மதுக்கரை எட்டிமடை ஆகிய இடங்களில் அடர்ந்த வனப்பகுதி வழியாக தண்டவாளங்கள் செல்கின்றன. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால், காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 11 யானைகள் தமிழக எல்லைப்பகுதிகளில் பலியாகி உள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மதுக்கரை பகுதியில் 3 யானைகள் இறந்தன. கடந்த அக்டோபர் மாதம் கஞ்சிக்கோடு பகுதியில் 2 யானைகள் இறந்தன. இதையடுத்து காட்டு யானைகள் உயிரிழப்பதை தடுக்க ரெயில்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ரூ.7½ கோடியில் சுரங்கப்பாதை
இந்த நிலையில் காட்டு யானைகள் ரெயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்க தென் இந்திய ரெயில்வே துறை சார்பில், மதுக்கரை, எட்டிமடை பகுதியில் ஏ மற்றும் பி லைன் பகுதியில் தண்டவாளத்துக்கு அடியில் 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகிறது. இதற்காக தென்னக ரெயில்வே ரூ.7 கோடியே 49 லட்சத்தை ஒதுக்கி உள்ளது.
தற்போது எட்டிமடை ஏ லைன் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான இரும்பு காரிடர்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த பகுதியில் 6 மீட்டர் ஆழத்திலும், 18.3 மீட்டர் நீளத்திலும் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் ஆரம்ப கட்டப்பணிகளுக்காக 10 மணிநேரம் ரெயில்போக்குவரத்து தடை செய்யப்பட்டு காரிடர் பொருத்தப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணிகள் முடிந்ததும் அதன் அருகே உள்ள பி லைன் பகுதியில் மற்றொரு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.
உயிரிழப்பை தடுக்கலாம்
சுரங்ப்பாதை அமைக்கப்பட்டால் அந்த வழியாக காட்டு யானைகள் எளிதில் தண்டவாளத்தை கடந்து செல்லும். இதுதவிர ரெயில்களை 30 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கும் நடவடிக்கையை செயல்படுத்துவதன் மூலமும் காட்டு யானைகள் ரெயிலில் அடிபடுவதையும், உயிரிழப்பையும் தடுக்க முடியும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.