பு.மாம்பாக்கத்தில் கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணி கண்டும், காணாமல் இருக்கும் அதிகாரிகளால் கிராம மக்கள் வேதனை
பு.மாம்பாக்கத்தில் சுரங்கப்பாதை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை கண்டும், காணாமல் இருக்கும் அதிகாரிகளால் கிராம மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பு. மாம்பாக்கம் கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு உளுந்தூர்பேட்டையை தான் சார்ந்து இருந்து வருகிறார்கள்.
இதற்காக சுமார் 7 கி.மீ. தூரமுள்ள தார்சாலை உள்ளது. இதில், ஒரு இடத்தில் ரெயில்வே கேட் அமைந்திருந்தது. தற்போது இந்த கேட் அகற்றப்பட்டு, அங்கு சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கிராம மக்கள் சுரங்கப்பாதைக்கு பதிலாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று கூறி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பணிகள் நிறுத்தம்
ரெயில்வே மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம மக்களை சமாதானம் செய்து, சுரங்கப்பாதை அமைக்கும் பணியை கடந்த செப்டம்பர் மாதத்தில் தொடங்கினர். அந்த பகுதியில் மிகப்பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு, சிமெண்டு கான்கிரீட் பாலங்கள் அங்கு போடப்பட்டது.
தொடக்கத்தில் முயல் வேகத்தில் நடந்த பணிகள், பின்னர் ஆமை வேகமாக மாறியது. இதன்பின்னர் தற்போது பணிகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது.
மாற்றுப்பாதையில் பயணம்
தற்போது பெய்த மழையின் காரணமாக இந்த பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் அங்குள்ள சிமெண்டு தூண்களுக்கு மேல்பகுதியில் கான்கிரீட் கம்பிகளும் நீண்டு கொண்டு நிற்கிறது. இதனால் ஏதேனும் விபரீதங்கள் நிகழும் வாய்ப்பும் உருவாகி இருக்கிறது.
மொத்தத்தில் இந்த வழியை கிராம மக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பதால், கில்லனூர், மாம்பாக்கம் கிராமங்கள் வழியாக உளுந்தூர்பேட்டை பகுதிக்கு வந்து செல்கிறார்கள். இந்த பாதையில் வருவதற்கு கூடுதல் நேரம் ஆகும் என்பதால், அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றிவிட்டு, பணியை முழுமையாக துரிதப்படுத்திட வேண்டும் என்று அந்த பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டும், காணாமல் உள்ளனர்
இதுகுறித்து, மாம்பாக்கம் மோகன் என்பவர் கூறியதாவது:-
முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி உள்ள எங்கள் கிராமத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு தினசரி ஆயிரக்கணக்கான லிட்டர் பால் எடுத்துச் செல்லப்படுகிறது. காலை, மாலை வேலைகளில் சரியான நேரத்திற்கு எடுத்து செல்வதில், தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த இன்னல்களை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக எங்கள் கிராமத்து மக்கள் அனுபவித்து வருகிறார்கள். சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை பேச்சுவார்த்தை நடத்தி சரி கட்டிய வருவாய்த்துறை அதிகாரிகள் தற்போது இந்த சுரங்கப்பாதை வேலைகள் பாதியில் நிற்பதை கண்டும் காணாமல் இருப்பது மன வேதனையை ஏற்படுத்துகிறது என்றார்.
மாம்பாக்கத்தை சேர்ந்த பொறியாளர் மணிகண்டன் கூறியதாவது:-
எங்கள் கிராமத்தில் இருந்து நேர்வழியில் உளுந்தூர்பேட்டை நகருக்கு செல்வதற்கு 10 நிமிடங்கள் தான் ஆகும். ஆனால் தற்போது மாற்று பாதையில் செல்வதால் 30 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது.
தற்போது எங்கள் கிராமத்தில் நடந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் கேட்பாரற்ற நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்த பாலத்துக்கு கீழ் பகுதியை சமூக விரோதிகள் மது அ ருந்தும் இடமாக பயன்படுத்தி வந்தனர். உடனடியாக இந்த பகுதியில் சுரங்கப்பாதை பணியை முழுமையாக முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கிட வேண்டும் என்றார்.