ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை உயர்வு; குவிண்டால் ரூ.10,500-க்கு விற்பனை- விவசாயிகள் மகிழ்ச்சி


ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை உயர்வு; குவிண்டால் ரூ.10,500-க்கு விற்பனை- விவசாயிகள் மகிழ்ச்சி
x

ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை உயர்ந்து குவிண்டால் ஒன்று ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு

ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை உயர்ந்து குவிண்டால் ஒன்று ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மஞ்சள் விலை உயர்வு

தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது.

கடந்த மாதம் ஈரோடு மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. இதற்கிடையில் மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிக மழை பெய்ததன் காரணமாக மஞ்சள் சாகுபடி பாதிக்கப்பட்டு தரம் குறைந்ததோடு, விலையும் குறைந்தது. இதன் காரணமாக வியாபாரிகளுக்கும், நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் கிடைக்கவில்லை. ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் விளையும் மஞ்சள் தரமாக இருப்பதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் ரூ.8 ஆயிரத்து 500-க்கு விற்பனையான ஒரு குவிண்டால் மஞ்சள் மேலும் விலை உயர்ந்து நேற்று ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனை ஆனது.

ரூ.10,500-க்கு விற்பனை

பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று ரூ.7 ஆயிரத்து 568 முதல் ரூ.9 ஆயிரத்து 919 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7 ஆயிரத்து 236 முதல் ரூ.9 ஆயிரத்து 779 வரைக்கும் விற்பனை ஆனது. இங்கு 962 மஞ்சள் மூட்டைகள் கொண்டு வரப்பட்டதில் 909 மூட்டைகள் ஏலம் போனது. ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று ரூ.7 ஆயிரத்து 550 முதல் ரூ.10 ஆயிரத்து 500 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7 ஆயிரத்து 119 முதல் ரூ.9 ஆயிரத்து 980 வரையும் ஏலம் போனது. இங்கு 1,246 மஞ்சள் மூட்டைகளில் 1,067 மூட்டைகள் ஏலம் போனது.

விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரத்து 400 வரைக்கும், கிழங்கு மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 789 முதல் ரூ.9 ஆயிரத்து 999 வரையும் விற்பனை ஆனது. இங்கு கொண்டு வரப்பட்ட 3 ஆயிரத்து 508 மஞ்சள் மூட்டைகளில் 1,482 மூட்டைகள் விற்பனை ஆனது.

கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று ரூ.8 ஆயிரத்து 569 முதல் ரூ.9 ஆயிரத்து 459 வரைக்கும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயிரத்து 529 முதல், ரூ.9 ஆயிரத்து 499 வரைக்கும் விற்பனையானது. இங்கு 182 மூட்டைகள் மஞ்சளில் 88 மூட்டைகள் விற்பனையானது. மஞ்சள் விலை ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story