தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகத்தில்எஸ்.எஸ்.சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு


தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-04T00:15:22+05:30)

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகத்தில்எஸ்.எஸ்.சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

எஸ்.எஸ்.சி தேர்வு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) மூலம் பலநோக்கு பணியாளர்கள், ஹவில்தார் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் காலியாக உள்ள 11 ஆயிரத்து 409 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வருகிற ஏப்ரல் மாதத்தில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 17-ந் தேதி ஆகும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பல்நோக்கு பணியிடங்களுக்கு 18 முதல் 25 ஆகும். ஹவில்தார் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 27-க்குள் இருக்க வேண்டும். மேலும் இந்த தேர்வு குறித்து www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்பு

இந்த தேர்வுகளுக்கு தயாராக விரும்பும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் அலுவலக வேலைநாட்களில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். மேலும் விவரங்களுக்கு 99425 03151 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story