தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: போலீசார், அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மற்றும் துணை போன வருவாய்த்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு வழங்கினர்.
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மற்றும் துணை போன வருவாய்த்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு வழங்கினர்.
ஊர்வலமாக வந்தனர்
ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற பெயரில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அனைத்து அமைப்புகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் என ஏராளமானோர் நேற்று காலையில தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வெளியே தூத்துக்குடி- ெநல்லை தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர்.
பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், முக்கிய நிர்வாகிகள் 50 பேரை மட்டும் மனு வழங்க செல்லுமாறு அறிவுறுத்தினர். எனினும் சுமார் 100 பேர் கலெக்டர் அலுவலக்ததுக்கு சென்று, கலெக்டர் செந்தில்ராஜிடம் மனு வழங்கினர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
போலீசார், அதிகாரிகள் மீது நடவடிக்கை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவார்கள் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்தார். இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அமைச்சரவை முடிவுப்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையில் துறை ரீதியான நடவடிக்கை மட்டும் ஏற்றுக்கொள்வதாக கூறப்பட்டு உள்ளது. இது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது.
சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் அளித்த உறுதிமொழியை அமல்படுத்த அமைச்சரவையை மறுபடியும் கூட்டி உரிய ஆலோசனை செய்து, அந்த அரசாணையை திரும்ப பெற்றோ அல்லது திருத்தம் செய்தோ துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற சட்டப்பேரவையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மனுவை பெற்று கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ், இதுகுறித்து அரசின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். இதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
திரளானவர்கள் பங்கேற்பு
இதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பாத்திமா பாபு, கிருஷ்ணமூர்த்தி, ஹரிராகவன், பிரபு, மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கரும்பன், ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால்,
தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர்கள் மாரிச்செல்வம், கிதர் பிஸ்மி, ஆம் ஆத்மி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் குணசீலன், தமிழர் விடியல் கட்சி மாவட்ட செயலாளர் சந்தனராஜ், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முகமது ஜான், தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் காந்தி மள்ளர், தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பலத்த பாதுகாப்பு
இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை, அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடிக்கு வரும் அனைத்து சாலைகளிலும் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்தனர்.
போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் பிரவேஷ்குமார் (நெல்லை), பொன்னி (மதுரை) ஆகியோர் மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாலாஜி சரவணன் (தூத்துக்குடி), சரவணன் (நெல்லை), தங்கத்துரை (ராமநாதபுரம்) ஆகியோர் தலைமையில், கலவர தடுப்பு போலீசார், அதிரடிப்படையினர் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.