தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்புதிய அதிநவீன பல் மருத்துவ இருக்கை


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்புதிய அதிநவீன பல் மருத்துவ இருக்கை
x

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிய அதிநவீன பல் மருத்துவ இருக்கையை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய அதிநவீன பல் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பல் மருத்துவ இருக்கையை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று தொடங்கி வைத்தார்.

அதிநவீன உபகரணம்

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பொதுமக்கள் பல் நோய்களுக்கான சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். இந்த பல் சிகிச்சை பிரிவை மேலும் நவீனப்படுத்தும் வகையில் அதிநவீன உபகரணங்களுடன் கூடிய புதிய பல் மருத்துவ இருக்கை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நவீன பல் மருத்துவ இருக்கையில், தானியங்கி விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து டாக்டரிடம் இருக்கையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதன் மூலமாக பல் வேர்சிகிச்சை, பல் கட்டுதல், பற்களை சீரமைத்தல், முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் தாடை மற்றும் முக அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.

நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, பல் மருத்துவ பிரிவு தலைமை மருத்துவர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வு

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மரக்குடி தெரு பகுதி மக்களை அமைச்சர் கீதாஜீவன் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அந்த பகுதியில் கழிவுநீர் வடிகால் சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவில் உள்ள 2 ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என்று அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். அப்போது, தி.மு.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story