தூத்துக்குடி பொது மையவாடியை நந்தவனமாக மாற்ற நடவடிக்கை


தூத்துக்குடி பொது மையவாடியை   நந்தவனமாக மாற்ற நடவடிக்கை
x

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பொது மையவாடியை நந்தவனமாக மாற்றுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பொது மையவாடியை நந்தவனமாக மாற்றுவதற்கான பணிகள் நேற்று தொடங்கியது.

நந்தவனம்

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் 50 ஏக்கர் பரப்பில் பொது மையவாடி அமைந்துள்ளது. இந்த மையவாடி 1916-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மையவாடியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதனால் பொது மையவாடியை சுத்தம் செய்து நந்தவனம் போன்று மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி மையவாடியில் தாழ்வான இடங்களை மண் கொண்டு நிரப்பப்பட உள்ளது. தொடர்ந்து மையவாடியின் சாலையோரங்கள் முழுவதும் நீர்மருது, புங்கை உள்ளிட்ட மரங்கள் நடப்பட உள்ளன.

முட்புதர் அகற்றம்

இதையொட்டி முதல்கட்டமாக மையவாடி பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி தனியார் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து நேற்று தொடங்கியது. மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி பணிகளை தொடங்கி வைத்தார். விரைந்து பணிகளை முடித்து மையவாடி பகுதியை சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் (பணிகள்) ரூபன் சுரேஷ் பொன்னையா, மாநகர நல அலுவலர் அருண்குமார், உதவி செயற்பொறியாளர் (பணிகள்) சரவணன், சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன், மேற்கு மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) சேகர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு கூட்டம்

மேலும், தூத்துக்குடி மாநகர பகுதிகளில் விளம்பர பதாகைகள் வைத்தல், டிஜிட்டல் பேனர்கள் வைப்பதை விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்துவது தொடர்பாக திருமண மண்டப உரிமையாளர்கள், டிஜிட்டல் பேனர் தயாரிக்கும் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் தலைமை தாங்கினார். ஆணையாளர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மேயர் பேசும் போது, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் விளம்பர பலகைகளால் விபத்து ஏற்படாமல் தடுக்கவும், தூய்மையாக வைப்பதற்கும், விளம்பர பலகைகள் வைப்பதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் விளம்பர பலகைகள் வைப்பதை ஒழுங்குபடுத்துவதே நோக்கம் ஆகும். கட்டணம் வசூலிப்பது நோக்கம் அல்ல. இதனால் திருமண நிகழ்ச்சிகளுக்கு பொது இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பதற்கு பதிலாக, திருமண மண்டப வளாகத்தில் ஒரு இடத்தை விளம்பர பதாகை வைப்பதற்கு ஒதுக்கி தர வேண்டும். கட்டிடங்களின் சுவர்களிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் காலத்துக்கு ஏற்ப மாற வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் டிஜிட்டல் விளம்பர பலகையை நிரந்தரமாக நிறுவி, அதில் விளம்பரம் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் செயற்பொறியாளர் (திட்டம்) ரங்கநாதன், மாநகர நல அலுவலர் அருண்குமார், உதவி செயற்பொறியாளர் (பணிகள்) சரவணன், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) ராமச்சந்திரன், நிர்வாக அலுவலர் தனசிங், உதவி ஆணையர் (பணியமைப்பு) சந்திரமோகன், சுகாதார அலுவலர்கள் மற்றும் திருமண மண்டபங்கள் மற்றும் டிஜிட்டல் பேனர் பதாகைகள் தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story