தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில்சித்திரை திருவிழா தேரோட்டம்
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று காலையில் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
சித்திரை திருவிழா
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கோலாகலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமி, அம்பாள் பல்வேறு சப்பரங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று காலை நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுடன் திருத்தேருக்கு எழுந்தருளினர். பாகம்பிரியாள் அம்பாள், சங்கர ராமேசுவரர் மற்றும் விநாயகர், முருகப் பெருமான் ஆகியோருக்கு தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. சிறிய தேரில் விநாயகரும், முருகப்பெருமானும், பெரிய தேரில் பாகம்பிரியாள் அம்பாள், சங்கர ராமேசுவரர் ஆகியோர் எழுந்தருளினர். தேரோட்ட நிகழ்ச்சியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அதிகாரிகள், பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.
கலை நிகழ்ச்சி
கீழரத வீதியில் இருந்து புறப்பட்ட தேருக்கு முன்பாக சிலம்பாட்டம், களியல் ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், உறுமிமேளம், தப்பாட்டம், சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிர் கோலாட்டம் மற்றும் தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாடியபடி சென்றனர். வானவேடிக்கையுடன் மாணவ, மாணவிகளின் வீர விளையாட்டுகளுடன் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேர் தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் நிலைக்கு வந்து சேர்ந்தது.
தேரோட்ட விழாவை முன்னிட்டு தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டுசத்தியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், ராஜாராம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.