தூத்துக்குடி வாகைக்குளத்தில்செட்டிநாடுஅரண்மனை போன்று முகப்பு தோற்றத்தில் அமைகிறது விமான நிலைய முகப்பு தோற்றம்


தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் செட்டிநாடு அரண்மனை போன்று முகப்பு தோற்றம் அமையவுள்ள விமான நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்க வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வாகைக்குளத்தில் செட்டிநாடு அரண்மனை போன்று முகப்பு தோற்றம் அமையவுள்ள விமான நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்க வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

விமான நிலையம்

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு மட்டும் தற்போது விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவாக்கம் செய்ய மத்திய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசு ரூ.388 கோடி நிதி ஒதுக்கி கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதில் 13 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் 600 பயணிகளை கையாளும் வகையில் புதிய முனையம் ஏற்படுத்தப்படுகிறது.

இங்கு சிறிய வகை விமானங்கள் மட்டுமே வந்து செல்லும் ஓடுதளம் மட்டுமே இருந்து வரும் நிலையில் பெரிய விமானங்கள் வந்து செல்வதற்கு வசதியாக விமான ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஏ-321 ரக விமானங்களை இயக்கும் வகையில் தற்போதுள்ள ஓடுபாதைகளை விரிவுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ரக விமானங்கள் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையில் தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மற்றும் கோபுரம், தொழில்நுட்ப கட்டிடம், தீயணைப்பு நிலையம் போன்ற பல்வேறு அத்தியாவசிய தேவைக்கான கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன. கார் பார்க்கிங் வசதி, பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு பயன்படுத்தும் 2 ஏரோ பிரிட்ஜ், புதிய இணைப்பு சாலை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் பயணிகளுக்கு தேவையான அத்தனை வசதிகளுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செட்டிநாடு அரண்மனை போன்ற...

தமிழகத்தின் பாரம்பரிய கட்டிடமான செட்டிநாடு அரண்மனை போன்ற தோற்றத்துடன் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்தின் முகப்பு அமைக்கப்பட உள்ளது. மேலும், தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியின் கலாசாரம் மற்றும் பாரம்பரிய கட்டிடக்கலையை புதிய முனையத்தின் கட்டிடம் வெளிப்படுத்தும் வகையிலும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் நான்கு நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய கட்டிடமாக புதிய அம்சங்களுடன் இருக்கும்.

கலெக்டர் ஆய்வு

இந்த வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது விமான நிலைய விரிவாக்க பணிகளின் போது மின்கம்பங்களை மாற்றி அமைப்பது குறித்தும், பொதுப்பாதை தொடர்பாகவும், பணிகளை விரைந்து முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து விமான நிலைய விரிவாக்க பணிகளின் தற்போதைய நிலை குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், விமான நிலைய இயக்குனர் சிவபிரசாத், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், விமான நிலைய உதவி பொது மேலாளர் சுவாகின பிரிட்டோ, விமான நிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

ரேஷன்கடையில் ஆய்வு

தொடர்ந்து தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் ஒரே நாடு, ஒரே கடை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் இருப்பு குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story