தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி 30-வது இடம் பிடித்தது
தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி 30-வது இடம் பிடித்தது
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவன தரவரிசை திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்து உள்ளது. அதன்படி 2022-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் கலை அறிவியல் கல்லூரிகள் பிரிவில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி 30-வது இடத்தை பிடித்து உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் 77-வது இடத்திலும், 2020-ம் ஆண்டில் 68-வது இடத்திலும், 2021-ம் ஆண்டு 54-வது இடத்திலும் இருந்த வ.உ.சி கல்லூரி இந்த ஆண்டு 30-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
வ.உ.சி கல்லூரியில் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பெருநிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு நிதியுதவியில் நடப்பு ஆண்டில் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக மூன்று திட்டங்களை தொடங்கி உள்ளோம். கல்லூரி மாணவர்களுக்கான தொழிற்துறை புரட்சி 4.0 திட்டம் செயல்படுத்த உள்ளோம். மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாதமும் 40 மாணவர்கள் வீதம் ஆண்டுக்கு சுமார் 500 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். இதே போன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தையும் தொடங்கி உள்ளோம். இதில் ஆண்டுக்கு 1200 அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றலை வளர்க்கவும் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளோம். இதனை தவிர மாணவர்களுக்கு பன்னாட்டு மொழி பயிற்சி போன்ற பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து வருகிறோம் என்று கூறினார்.