தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில்ரூ.2 லட்சம் கோடி திட்டங்களுக்குபுரிந்துணர்வு ஒப்பந்தம்


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில்ரூ.2 லட்சம் கோடி திட்டங்களுக்குபுரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில்ரூ.2 லட்சம் கோடி திட்டங்களுக்குபுரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் வெளிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சரக்கு பெட்டக முனையம்

மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிபோக்கு அமைச்சகம் சார்பில் சர்வதேச உலகளாகிய கடல்சார் இந்திய உச்சி மாநாடு மும்பையில் நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ரூ.434.17 கோடி திட்ட மதிப்பில் 9-வது சரக்கு தளத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த சரக்கு பெட்டக முனையமானது 370 மீட்டர் நீளமும், 6 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டதாகவும், 8 ஆயிரம் சரக்கு பெட்டகம் கொள்ளளவு கொண்ட சரக்கு பெட்டக கப்பலை கையாளும் வசதி கொண்டதாகவும் இருக்கும்.

ரூ.2 லட்சம் கோடி

மேலும் வ.உ.சி துறைமுகத்தில் ரூ.26.70 கோடி திட்ட மதிப்பில் 5 மெகாவாட் சூரிய மின்னாலை மற்றும் ரூ.18.38 கோடி திட்ட மதிப்பில் 2 மெகாவாட் காற்றாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் துறைமுகத்துக்கு தேவையான அனைத்து எரிசக்தியும் துறைமுகத்தின் மூலமே தயாரிக்கப்பட்டு உபயோகிக்கப்படும். மேலும் வ.உ.சி. துறைமுகம் இந்தியாவின் முதல் பசுமை துறைமுகமாக மாறும்.

இந்த உச்சி மாநாட்டின் போது, பல்வேறு நிறுவனங்கள் சார்பில் துறைமுகத்தில் முதலீடு செய்வதற்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி திட்ட மதிப்பில் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் முக்கியமாக பசுமை ஹைட்ரஜன் மையம், தரைதள காற்றாலை, பயணிகள் கப்பல் சேவை மற்றும் துறைமுக பயன்பாட்டுக்காக பசுமை இழுவை கப்பல் போன்ற திட்டங்களுக்கு கையெழுத்திடப்பட்டுள்ளன.

2-ம் இடத்தை வென்றது

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற தமிழ்நாடு குறித்த சிறப்பு கலந்துரையாடலில் தமிழக பொதுப்பணித்துறை (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அரசு கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப் யாதவ் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளில் வ.உ.சி. துறைமுக ஆணையம் நடுத்தர அளவிலான அரங்கு பிரிவில் சிறந்த அரங்கத்துக்கான 2-ம் இடத்தை வென்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story