தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை
தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இசைப்பள்ளி
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இசைப்பள்ளியில் பயில்வதற்கு மாணவ - மாணவிகளுக்கு வயது வரம்பு 12 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். மூன்றாண்டுகள் முழு நேரமாக படிக்க வேண்டும். முதலாம் ஆண்டுக்கு ரூ.350-ம் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.325-ம் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இசைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இலவச பஸ் வசதி, ரெயில் கட்டண சலுகை வசதி, அரசு மாணவர் விடுதி வசதி, மாதம் தோறும் மாணவர்களுக்கு தலா ரூ.400 கல்வி உதவித்தொகை மற்றும் இலவச சைக்கிள், இலவச காலனி ஆகியவை அரசு விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு தேர்வு இயக்ககத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. சான்றிதழ்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவுமூப்பு அடிப்படையில் இசைப்பள்ளிகளிலும் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களிலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் வளாக நேர்காணல் மூலம் தனியார் பள்ளிகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மாணவ-மாணவிகளும் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து இசையை கற்று இசைஆசிரியர்களாகவும், கலை வல்லுநர்களாகவும் உருவாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 0461-2300605, செல்போன் எண்: 94877 39296 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.