தூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையில் இருந்து4 லாரிகளில் ஜிப்சம் அகற்றம்


தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 4 லாரிகளில் ஜிப்சம் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 4 லாரிகளில் வெள்ளிக்கிழமை ஜிப்சம் அகற்றப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றுவது, ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவது ஆகியவற்றுக்கு அனுமதி அளித்தது.

9 பேர் குழு அமைப்பு

இதையடுத்து அந்த பணிகளை மேற்கொள்வதற்காக உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அமைத்தார். இந்த குழுவினர் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஆலை வளாகத்திலும், நுழைவுவாயிலிலும் மொத்தம் 18 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் அதனை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டது.

கடந்த 21-ந்தேதி ஜிப்சத்தை அகற்றுவதற்கு வசதியாக கனரக வாகனங்கள் மற்றும் 6 பணியாளர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உறைந்த நிலையில் இருந்த ஜிப்சம் கழிவுகளை பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் உடைத்து லாரிகளில் ஏற்றுவதற்கு தயார் செய்தனர்.

ஜிப்சம் அகற்றம்

தொடர்ந்து நேற்று லாரிகள் மூலம் ஜிப்சம் வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமையிலான 9 பேர் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில் 4 லாரிகள் ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டன. அந்த லாரிகளில் ஜிப்சம் கழிவுகள் ஏற்றப்பட்டு நெல்லை, விருதுநகரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆலையின் உள்ளே செல்லும் வாகனங்கள், ஆலையில் இருந்து எடுத்து செல்லப்படும் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும், அதற்காக தனியாக வைக்கப்பட்டு உள்ள பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டன.

மேலும் ஆலையில் இருந்து ஜிப்சம் கழிவுகள் அகற்றும் பணி தொடங்கி இருப்பதால் ஆலையின் நுழைவுவாயில் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளிலும் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story