வடமாநில வாலிபர்களை தாக்கி டி.வி.க்கள்-பணம் பறிப்பு


வடமாநில வாலிபர்களை தாக்கி டி.வி.க்கள்-பணம் பறிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் வடமாநில வாலிபர்களை தாக்கி டி.வி.க்கள் மற்றும் பணம் பறித்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

சிங்காநல்லூர்

கோவையில் வடமாநில வாலிபர்களை தாக்கி டி.வி.க்கள் மற்றும் பணம் பறித்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டி.வி. வியாபாரம்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாசிம் (வயது 27), சாருக் (26). இவர்கள் சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தில் தங்கி இருந்து டி.வி., கியாஸ் அடுப்பு போன்ற பொருட்களை மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்று வீதி, வீதியாக விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தாசிம் மற்றும் சாருக் ஆகியோரிடம், கடந்த சில நாட்களுக்கு முன்பு சூலூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் முருகன் (34), அவருடைய நண்பரான பள்ளபாளையத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பிரதீஷ் (27) ஆகியோர் 2 டி.வி.க்களை வாங்கினர். ஆனால் அந்த டி.வி.க்கள் அடுத்த 2 நாட்களில் பழுதானதாக தெரிகிறது. இதனால் தாசிம், சாருக் ஆகியோரை தேடி வந்தனர்.

கட்டி வைத்து தாக்குதல்

இதற்கிடையில் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் அவர்கள் 2 பேரும், டி.வி.க்களை விற்பனை செய்து கொண்டு இருந்தனர். இதை அறிந்த முருகன் மற்றும் பிரதீஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து திருட்டு டி.வி.க்களையா விற்பனை செய்கிறீர்கள்?, எங்களுக்கு விற்ற டி.வி.க்கள் ஏன் உடனே பழுதானது என்று கேட்டு மிரட்டினர். மேலும் அவர்களை வரதராஜபுரத்துக்கு அழைத்து வந்து, அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிகிறது.

பின்னர் சாருக்கை மட்டும் அங்கு விட்டுவிட்டு, அந்த பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பவரை காவலாக வைத்தனர். தொடர்ந்து தாசிமை காரில் ஏற்றி அவர்கள் வரதராஜபுரத்தில் தங்கி இருந்த வீட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் அந்த வீட்டில் இருந்த 5 டி.வி.க்கள், கியாஸ் அடுப்புகள் மற்றும் ரூ.46 ஆயிரம் ஆகியவற்றை முருகன் மற்றும் பிரதீஷ் ஆகியோர் எடுத்துக்கொண்டு தாசிமை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர்.

போலீஸ்காரர் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த தாசிம், இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சூலூர் போலீஸ்காரரான முருகன், பிரதீஷ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் டி.வி.க்கள், பணத்தை பறித்துச்சென்றது உண்மை என்பது தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்ரீஜித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீஸ்காரரே வடமாநில வாலிபர்களிடம் டி.வி.க்கள் மற்றும் பணத்தை பறித்துச்சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story