தர்மபுரி அருகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள சின்னகணவாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் -தீனா தம்பதி. கூலி வேலை செய்து வரும் இந்த தம்பதிக்கு மொத்தம் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் இரட்டையர்களான ராமதேவி, லட்சுமி தேவி ஆகியோர் டி.காணிகரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தனர். நேற்று முன்தினம் வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் இருவரும் 500-க்கு 347 மதிப்பெண்கள் பெற்றனர். ஒரே குணாதிசயம் கொண்ட இந்த இரட்டையர்கள், தேர்விலும் ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் ராமதேவி தமிழ்-91 ஆங்கிலம்-79, கணிதம்-59, அறிவியல்- 58, சமூக அறிவியல்- 60 மதிப்பெண்கள் பெற்றார். லட்சுமி தேவி தமிழ்- 83, ஆங்கிலம்- 87, கணிதம்- 56, அறிவியல்- 60, சமூக அறிவியல்-61 என பாடவாரியாக மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்களை பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், கிராம மக்கள் இனிப்பு ஊட்டி வாழ்த்தினர்.