நெல்லை: சமையல் தொழிலாளி வெட்டி படுகொலை - 2 பேர் கைது


நெல்லை: சமையல் தொழிலாளி வெட்டி படுகொலை  - 2 பேர் கைது
x

களக்காடு அருகே சமையல் தொழிலாளி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி


நெல்லை மாவட்டம்,களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவருக்கு செல்வி என்ற மனைவியும், சுடலைமுத்துக்குமார் (12), அருண்குமார் (11) ஆகிய மகன்களும் உள்ளனர். முருகன் சமையல் தொழிலாளி ஆவார்.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் முருகனின் நண்பரான முத்தையா என்ற சுரேஷ் சிங்கிகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவரானார். இந்த தேர்தலில் முருகன் முத்தையாவுக்கு பல்வேறு உதவிகள் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க கிளை செயலாளரான வானமாமலை என்ற சுரேசுக்கு முருகன் மீது விரோதம் ஏற்பட்டது.

இதையடுத்து வானமாமலை முருகனுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் கடந்த 22 ம் தேதி காலை 8 மணியளவில் வயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற முருகனை, வானமாலை மற்றும் 4 பேர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்தனர்.

இதுபற்றி அவரது மனைவி செல்வி (40) அளித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த வானமாமலையையும் மற்ற 4 பேரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சிங்கிகுளத்தை சேர்ந்த ஐகோர்ட் ராஜா (34), ராமச்சந்திரன் (43) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கோதைசேரியை சேர்ந்த சொக்கலிங்கம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள அதிமுக நிர்வாகி வானமாமலை என்ற சுரேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story