204-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த எழும்பூர் அரசு கண் மருத்துவமனை
உலகின் 2-வது பழமையான கண் மருத்துவமனையான எழும்பூர் அரசு கண் மருத்துவமனை 204-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
எழும்பூர் கண் மருத்துவமனை
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 1809-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மார்பீல்டு கண் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக 1819-ம் ஆண்டு சென்னை ராயப்பேட்டை 'பழைய மெட்ராஸ் கிளப்' அருகே டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சன் என்பவரால் இந்த கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது. 1844-ம் ஆண்டு இந்த மருத்துவமனை சென்னை எழும்பூர் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த இந்த மருத்துவமனை, நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
உலகின் 2-வது பழமையான கண் ஆஸ்பத்திரி, ஆசியாவின் முதல் தொன்மையான கண் ஆஸ்பத்திரி என்ற அந்தஸ்துடன் செயல்பட்டு வரும் எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரி நேற்று 204-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது.
1887-ல் கட்டிய கட்டிடம்
வைரஸ் மூலம் கண்களில் பரவும் 'மெட்ராஸ்-ஐ' எனப்படும் நோய் கண்டுபிடிக்கப்பட்டதும் இந்த மருத்துவமனையில் தான். கண்புரை அறுவை சிகிச்சையும் இங்கு தான் முதன் முதலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக 1926-ம் ஆண்டு கண் மருத்துவம் சம்பந்தமான படிப்பும், 1948-ம் ஆண்டு கண் வங்கியும் இந்த ஆஸ்பத்திரியில் தான் தொடங்கப்பட்டது.
1887-ம் ஆண்டு இந்த மருத்துவமனை வளாகத்தில் 3 தனித்தனி கட்டிடங்கள் கட்டப்பட்டன. அத்துடன் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு, ஐரோப்பியா மற்றும் இந்திய மாடல்களில் சமையல் அறை, குடியிருப்பு ஆகியவையும் கட்டப்பட்டன. தற்போது வரை இந்த கட்டிடங்கள் பயன்பாட்டில் உள்ளன.
ஓயாத சேவை
1911-ம் ஆண்டு 'தி லேடி லாவ்லீ பிளாக்' எனப்படும் கட்டிடமும் இங்கு கட்டப்பட்டது. இதுவும் தற்போது வரை நோயாளிகளுக்கான வார்டு மற்றும் ஆபரேசன் தியேட்டர்களாக தனது பங்களிப்பை அளித்து வருகிறது. இங்குள்ள பழமையான கட்டிடங்கள் தொன்மை மாறாமல் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கட்டிடத்தின் வெளித்தோற்றம் இப்போதும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
203 ஆண்டுகள் பல லட்சம் பேருக்கு ஒளி வழங்கி ஓயாத சேவையை மேற்கொண்டு வரும் இந்த கண் மருத்துவமனையின் இயக்குனராக தற்போது டாக்டர் எம்.வி.எஸ்.பிரகாஷ் இருந்து வருகிறார்.
478 படுக்கைகள்
இந்த மருத்துவமனையின் செயல்பாடு குறித்து அவர் கூறியதாவது:-
கண் நோய்களுக்கு உயர்தர சிகிச்சை மையமாக எழும்பூர் கண் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. தினசரி 600 முதல் 800 வெளிநோயாளிகளும், 250-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகிறார்கள். சராசரியாக தினந்தோறும் 40-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு 478 படுக்கைகள் உள்ளன. அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
பயிற்சிக்காக வரும் வெளிநாட்டினர்
தற்போது இங்கு எம்.எஸ். (கண் மருத்துவம்) படிப்பில் ஆண்டுக்கு 30 மாணவர்களும், பி.எஸ்சி. கண் மருத்துவ படிப்பில் 20 பேரும் சேர்த்து கொள்ளப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கண் மருத்துவர்களும், வெளிநாட்டைச் சேர்ந்த கண் மருத்துவர்களும் பயிற்சிக்காக வந்து செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒளி இழந்த பலரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் மகுடமாக 200 ஆண்டுகளுக்கு மேலாக எழும்பூர் அரசு கண் மருத்துவமனை திகழ்ந்து வருவது மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரியது ஆகும்.
200 ஆண்டு பொக்கிஷங்களை உள்ளடக்கிய மியூசியம்
நவீன தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பாக கண் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட பழமையான சாதனங்கள் மற்றும் இந்த மருத்துவமனையில் பணியாற்றிய பிரிட்டிஷ் கண் மருத்துவர்களின் மருத்துவ குறிப்புகள் உள்ளிட்டவை இப்போதும் எழும்பூர் கண் மருத்துவமனை நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. எலியட் மியூசியம் என்ற பெயரில் இங்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட மருத்துவ கருவிகள் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் கண் மருத்துவர்கள் இந்த மியூசியத்தை ஆச்சரித்துடன் பார்த்து செல்கின்றனர். 200 ஆண்டுகள் பொக்கிஷங்கள் அடங்கிய இந்த மியூசியத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்பது பெரும் குறை.