பஸ் ஸ்டாண்டில் மது போதையில் இருவர் கட்டிப்புரண்டு சண்டை
வேடசந்தூர் பஸ் ஸ்டாண்ட்டில் மது போதையில் இருவர் கட்டிப்புரண்டு சண்டையிட்டு ஒருவரையொருவர் அடித்து கொண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பஸ் ஸ்டான்டில் நேற்று மதியம் 45 வயது மதிக்கதக்க இருவர் அதிக மதுபோதையில் வந்தனர். குடிபோதையில் இருந்த இருவர் வாய்த்தகராறு ஏற்ப்பட்டு கைகலப்பில் ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் இருவரும் கட்டிப்புரண்டு ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் காயம் அடைந்த ஒருவர் உடன் சண்டையிட்டவரின் அடியை தாங்க முடியாமல் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டத்தில் புகுந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் விடாமல் விரட்டிச்சென்று மீண்டும் ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொண்டனர். பஸ்சுக்காக காத்திருந்த பெண்கள் அலறி அடித்து ஓடினார்கள். இதில் ஒருவருக்கு தலையில் காயம் பட்டு ரத்தம் கொட்டியது.
இருவரும் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் மத்தியில் கட்டிப் புரண்டு 20 நிமிடம் சண்டை போட்டனர். பஸ் ஸ்டாண்டில் நின்ற பயணிகள் ஏதோ விபரீத சம்பவம் நடந்து விட்டதோ என நினைத்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதனால், அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு பயணிகள் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து ஒரு போலீஸ்காரர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மது போதையில் சண்டையிட்டுக்கொண்டவர்களை விலக்கி விட்டு இருவரையும் எச்சரிக்கை செய்து அங்கிருந்து விரட்டிவிட்டார்.
வேடசந்தூர் பஸ் ஸ்டாண்டில் மது போதையில் இருவர் கட்டிப்புரண்டு சண்டையிட்ட காட்சியை பதட்டத்தோடு சினிமா படப்பிடிப்பு நடப்பது போல பயணிகள் பார்த்தனர். வேடசந்தூர் பஸ் ஸ்டாண்டில் இருபோல அடிக்கடி சம்பவங்கள் நடப்பதால் போலீஸ் புறகாவல் நிலையம் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.