தந்தை மகனை திட்டி தாக்கிய 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை
சாதி பெயரை சொல்லி தந்தை மகனை திட்டி தாக்கிய 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை விழுப்புரம் எஸ் சி எஸ் டி கோர்ட்டு தீர்ப்பு
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசத்தை அடுத்த நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையப்பன்(வயது 50). தொழிலாளியான இவர் கடந்த 2016-ம் ஆண்டு வைக்கோல் போர் போடுவதற்காக ஒரு காரில் தனது நண்பர்கள் சிலருடன் எலவழப்பாக்கத்திற்கு புறப்பட்டார். நெற்குணம் ஏரிக்கரை அருகே சென்றபோது அங்கு அதே பகுதியை சேர்ந்த நரேஷ்குமார்(25), ஸ்ரீதர்(26) உள்ளிட்ட 5 பேர் காருக்கு வழிவிடாதபடி நடுரோட்டில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு மது அருந்திக் கொண்டிருந்தனர்.
இதை தட்டிக்கேட்ட வெள்ளையப்பனை அவர்கள் 5 பேரும் சேர்ந்து சாதிப்பெயரை சொல்லி திட்டி தாக்கியதோடு கார் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினர். இதில் காயமடைந்த வெள்ளையப்பனை அவரது மகன் அஜித்குமார்(25) மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இதனால் அவர் மீது நரேஷ்குமார் தரப்பினருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த சூழலில் சில நாட்கள் கழித்து அதே கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. அப்போது அங்கு வந்த அஜித்குமாரை நரேஷ்குமார் தரப்பினர் கடத்திச்சென்று ஒரு மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேஷ்குமார், ஸ்ரீதர் உள்ளிட்ட 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட நரேஷ்குமார், ஸ்ரீதர் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்தும், மற்ற 21 பேரை விடுதலை செய்தும் நீதிபதி பாக்கியஜோதி தீர்ப்பு கூறினார்.