ரூ.8½ லட்சத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது
2 பேர் கைது
தாராபுரம்,
தாராபுரம் அருகே 2 விவசாயிகளிடம் ரூ.8½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
தாராபுரம் அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி துரைராஜ். இவர் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி தாராபுரம்- உடுமலை சாலையில் உள்ள வங்கியில் நகையை ரூ.6½ லட்சத்திற்கு அடகு வைத்தார். பின்னர் அந்த பணத்தை மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவரை பின் ெதாடர்ந்து மற்றொரு மோட்டார்சைக்கிளில் 2 ஆசாமிகள் சென்றனர். அந்த ஆசாமிகள் துரைராஜ் கவனத்தை திசை திருப்பி ரூ.6½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
அதே போல் கடந்த மாதம் 28-ந் தேதி தளவாய் பட்டினத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் தாராபுரம் ஐந்து முக்கு பார்க் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
2 பேர் கைது
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருச்சி ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த ஜானகிராமன் (வயது 44) மற்றும் அதே பகுதியை சேர்ந்த முரளி (57) ஆகிய இருவரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 ேபரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.