மரத்தில் கார் மோதி விபத்து; சிறுவன் உள்பட 2 பேர் பலி


மரத்தில் கார் மோதி விபத்து; சிறுவன் உள்பட  2 பேர் பலி
x

மரத்தில் கார் மோதி விபத்து; சிறுவன் உள்பட 2 பேர் பலி

திருப்பூர்

காங்கயம்,

காங்கயம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த 4 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பனியன் நிறுவன தொழிலாளி

திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 45). அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மனைவி ராமா (42). இவர்களுடைய 2 மகன்கள் கிரண்குமார் (12), பரணிகுமார் (10). இவர்கள் இவரும் திருப்பூரில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

இந்த நிலையில் கேசவன் தனது குடும்பத்துடன் தஞ்சாவூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரினம் செய்ய முடிவு செய்தார். அதன்படி கேசவன், அவரது மனைவி ராமா, மகன்கள் கிரண்குமார், பரணிகுமார் மற்றும் இவரது உறவினரான ஊட்டியை சேர்ந்த ஜனார்த்தனன் (60), திருப்பூரை சேர்ந்த முகுந்தன் (52) ஆகிய 6 பேரும் ஒரு காரில் தஞ்சாவூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றனர்.

2 பேர் பலி

அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று முன்தினம் இரவு கிளம்பி திருப்பூர் நோக்கி காங்கயம் வழியாக காரில் வந்தனர். காரை கேசவன் ஓட்டினார். டிரைவரின் இடதுபுறம் ஜனார்த்தனன் உட்கார்ந்து இருந்தார். மற்ற அனைவரும் பின் பக்க சீட்டில் உக்கார்ந்து வந்தனர். இவர்களுடைய கார் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் காங்கயம்- திருப்பூர் சாலை, படியூரை அடுத்த தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் அமர்ந்திருந்த ஜனார்த்தனன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற 5 பேரும் படுகாயங்களுடன் காருக்குள் உயிருக்கு போராடிய நிலையில் அபயக்குரல் எழுப்பினர். அப்போது அந்த வழியாக வந்தவர்களும், அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்து படுகாயங்களுடன் காருக்குள் சிக்கி தவித்த 5 பேரையும் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பரணிகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான ஜனார்த்தனின் சொந்த ஊர் தஞ்சை அருகே உள்ள சூரியனார் கோவிலாகும். அவர் திருப்பூர் வந்து தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.



Next Story