கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண் உள்பட 2 பேர் கைது


கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண் உள்பட 2 பேர் கைது
x

கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண் உள்பட 2 பேர் கைது

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கந்துவட்டி கொடுமை

தமிழகம் முழுவதும் கந்துவட்டி கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 'ஆபரேஷன் கந்துவட்டி' என்ற பெயரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் கமிஷனர்களுக்கு அறிவுரை வழங்கிஉ ள்ளார்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் ஆபரேஷன் கந்துவட்டி திட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கந்துவட்டி புகார்கள் குறித்து விசாரிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெண்ணுக்கு மிரட்டல்

தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் அருகே ஆரியப்படைவீடு பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவருடைய மனைவி சந்தானதேவி (வயது 38). இவர் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (45) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இதற்கு வட்டியாக ரூ.60 ஆயிரம் கொடுத்துள்ளார்.

ஆனால் அய்யப்பன் மேற்கொண்டு பணம் கொடுக்குமாறு கந்துவட்டி கேட்டு சந்தானதேவியை மிரட்டி உள்ளார். இது குறித்து சந்தானதேவி பட்டீஸ்வரம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆவணங்கள் பறிமுதல்

இதேபோல் தஞ்சை மாதாக்கோட்டை என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் செல்வகிரி. இவரது மனைவி உமா (44). இவர் மாதாக்கோட்டை வெற்றி நகரை சேர்ந்த குமார் மனைவி மல்லிகா என்பவரிடம் ரூ.1 லட்சம் கடனாக பெற்று அதற்கு வட்டியாக ரூ.60 ஆயிரம் செலுத்தினார்.

ஆனால் மல்லிகா கந்துவட்டி கேட்டு உமாவை மிரட்டி உள்ளார். இது குறித்து உமா கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லிகாவை கைது செய்தனர். இதையடுத்து மல்லிகா வீட்டில் சோதனை நடத்தி பல ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புகார் அளிக்கலாம்

கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி போலீசாரிடம் புகார் அளிக்கலாம். இது போன்று கந்துவட்டிவசூல் செய்பவர்கள் மீது நடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story