குலசேகரன்பட்டினம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
குலேசகரன்பட்டினம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
குலசேகரன்பட்டினம்:
குலேசகரன்பட்டினம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் கண்காணிப்பு
குலசேகரன்பட்டினம், உடன்குடி பகுதியில் சிலர் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து குலசேகரன்பட்டினம் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் குலசேகரன்பட்டினம், தருவைகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு பின்னால் காட்டு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் தப்பி ஓடி முயன்றதாக கூறப்படுகிறது. போலீசார் சுற்றிவளைத்து அந்த 2 பேரையும் பிடித்தனர்.
2 வாலிபர்கள் கைது
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் புதுமனை கோட்டைவிளையை சேர்ந்த ஷெரிப் மகன் சாகுல்அமீது என்று அமீர் (வயது 26), செல்வமுத்து மகன் சீயான் என்ற முத்துராஜ் (26) என்பதும், அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்று வந்ததும் தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய சோதனையில் 3.2 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அந்த 2 பேரையும் கைது செய்தனர்.