டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: நாமக்கல்லில் பழைய டயர்கள் அகற்றம்
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: நாமக்கல்லில் பழைய டயர்கள் அகற்றம்
தற்போது பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் டெங்கு காய்ச்சல் மற்றும் பல்வேறு வகையான காய்ச்சல்கள் பரவும் நிலை உள்ளது. எனவே டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சுதா உத்தரவின்படி நாமக்கல் நகர பகுதிகளில் ஆங்காங்கே சாலையோரம் வைக்கப்பட்டு உள்ள பழைய டயர்களை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்பட்டது.
இதில் 200 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் நாமக்கல் நகரில் லாரி பட்டறைகள் அதிகமாக உள்ள சேலம் ரோடு பகுதியில் பொது இடங்களில் இருந்த பழைய டயர்களை அப்புறப்படுத்தினர். ஒரு சில இடங்களில் இருந்த டயர்களை மழை நீர் தேங்காத வண்ணம் உள்பகுதியில் வைத்துக்கொள்ள தெரிவிக்கப்பட்டது. மேலும் சேந்தமங்கலம் ரோடு, குட்டை தெரு, துறையூர் ரோடு, திருச்சி ரோடு, மோகனூர் ரோடு, பரமத்தி ரோடு, திருச்செங்கோடு ரோடு, பொய் ஏரிக்கரை ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் பழைய டயர்களை அகற்றும் பணி தூய்மை பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பழைய டயர்கள் அகற்றும் பணியில் நகர் நல அலுவலர் பரிதாவாணி, துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் பழனிசாமி, செல்வகுமார், பாஸ்கர் மற்றும் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.