உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்பு


உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 14 Dec 2022 5:21 AM IST (Updated: 14 Dec 2022 6:29 AM IST)
t-max-icont-min-icon

அரசியலில் இணைந்தது அமைச்சராக பொறுப்பு ஏற்கும் வரையிலும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கடந்து வந்த பாதை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் புதுவரவாக இடம்பெற உள்ள தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், மக்கள் பணி மற்றும் கட்சி பணிகளில் முத்திரை பதித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் தனது அரசியல் பயணத்தை தொடங்கியது முதல், தி.மு.க. இளைஞரணியின் சின்னமான வாலிபர் ஒருவர் தி.மு.க.வின் கொடியை ஏந்தியவாறு நடைபோடுவது போன்றும், அதன் பின்னால் சூரியன் தெரிவது போன்றும் இருக்கும் உருவத்தை தனது சட்டையின் வலது பக்கத்தில் பொறித்துள்ளார்.

இந்த சட்டையை அணிந்தே அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

பிரசாரம்

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த ஊராட்சி சபை கூட்டங்களை பல மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் திறம்பட நடத்தினார். தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளில் வெல்ல இவரின் பிரசாரத்துக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு.

2019-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்றபோது தி.மு.க. அதிகாரத்தில் இல்லாதபோதும், இளைஞர் அணியினரை கொண்டு மக்கள் பணிகளை செய்தார். அதன்படி, இதுவரை நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் தி.மு.க. இளைஞர் அணியினால் தூர்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளன.

புத்துயிர்

நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார். குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, தமிழகத்தில் முதல் நபராக தி.மு.க. இளைஞர் அணியினருடன் களத்தில் இறங்கி போராடி கைதானார். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கவேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை செயல்படுத்த துணிந்த அன்றைய துணை வேந்தர் சூரப்பாவின் முடிவைதிரும்பப்பெறக்கோரி மாணவர் அணியுடன் இணைந்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். இதன் விளைவாக பா.ஜ.க.-அ.தி.மு.க. அரசு அந்த முடிவை திரும்பப்பெற்றது.

சட்டமன்ற தொகுதிக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் என மொத்தம் 25 லட்சம் புதிய உறுப்பினர்களை இளைஞர் அணியில் சேர்க்கும் பணியை ஒருங்கிணைத்தார். அவர்களில் திறம்பட பணியாற்றிய 3.5 லட்சம் பேரை இளைஞர் அணி நிர்வாகிகளாக நியமித்து, கட்சிக்கு புத்துயிர் ஊட்டினார். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இப்பணி நடந்ததால், இளைஞர்கள் தேர்தல் களத்தில் எழுச்சியுடன் பணியாற்ற காரணமாக அமைந்தது.

ஒற்றை செங்கல் பிரசாரம்

சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலினின் பிரசாரம் அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. 'ஒற்றை செங்கல்' மூலம் மத்திய பா.ஜ.க. அரசு-அ.தி.மு.க. கூட்டணியின் தமிழர் விரோத போக்கை உலகறியச் செய்து, தேர்தல் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றினார். அந்த தேர்தலில் இவரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார்.

அவர் தொகுதியில் கடந்த கல்வியாண்டில் மட்டும் ஒரு கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையாக மாணவ-மாணவிகளுக்கு வழங்கியுள்ளார். பள்ளி-கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் தொகுதி முழுவதும் இலவச இணைய வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். தொகுதிக்கென பிரத்யேக செல்போன் செயலியை உருவாக்கி, தொகுதி மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வு காண்கிறார்.

அமைச்சரவையில் வாய்ப்பு

மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரையில் கடலுக்கு அருகில் சென்று கடலை கண்டு ரசிக்கும் வகையிலான தற்காலிக சிறப்பு நடைபாதையை நிரந்தர பாதையாக அமைக்க வேண்டும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இவர் வைத்த கோரிக்கையை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றி தந்தார். அந்த நடைபாதையையும் உதயநிதி ஸ்டாலினே திறந்தும் வைத்தார். தமிழ்நாட்டின் பெருமைமிகு முன்னெடுப்பான 'செஸ் ஒலிம்பியாட்' குழுவில் இடம்பெற்று குறிப்பிடத்தகுந்த வகையில், பல பணிகளை ஒருங்கிணைத்து பாராட்டை பெற்றார்.

இவரின் கட்சி பணியை அங்கீகரிக்கும் வகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைமைக்கழகம் இவரை மீண்டும் இளைஞர் அணி செயலாளராக பணியாற்றும் வாய்ப்பை வழங்கியது. இவரின் கட்சி பணி-மக்கள் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், முதல்-அமைச்சர் தன்னுடைய அமைச்சரவையில் இணைத்து மக்கள் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். அவருக்கு ஒதுக்கப்படும் துறையிலும் மிகச்சிறப்பாக பணியாற்றி மக்களின் மனங்களை வெல்வார் என்பதில் ஐயமில்லை என்று அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story