115 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
உடுமலையை அடுத்த ஆண்டியகவுண்டனூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 115 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாம்
உடுமலையை அடுத்த ஆண்டியகவுண்டனூரில் நேற்று வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து சமூக பாதுகாப்பு, வேளாண்மை துறை, கால்நடை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் துறைகள் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக பொதுமக்களிடம் எடுத்துக்கூறியதுடன் அதை பெறுவதற்கான வழிமுறைகளையும் தெரிவித்தனர்.
சட்ட விழிப்புணர்வு
மேலும் உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு ஊராட்சியை தேர்ந்தெடுத்து அங்குள்ள பொதுமக்களை அரசுத்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தீர்வு காண வேண்டும். இதே போன்று பொதுமக்கள் அளிக்கும் அனைத்து மனுக்கள் மீது நேரடியாக ஆய்வு செய்து விரைந்து தீர்வு காண்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
115 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
அதைத்தொடர்ந்து 115 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.56 லட்சத்து 14 ஆயிரத்து 881 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதையடுத்து அனைத்து துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். அதற்கு முன்னதாக திருமூர்த்தி அணையில் தளி வாய்க்காலை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் சீரான முறையில் குடிநீர் வினியோகம் நடைபெறுகிறதா என்று ஆய்வு செய்தார். மேலும் திருமூர்த்திமலை அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியிலும் ஆய்வு செய்தார்.
இதில் உடுமலை ஆர்.டி.ஓ.ஜஸ்வந்த் கண்ணன், இணை இயக்குனர் (வேளாண்மை) மாரியப்பன், உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன், மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி மகாராஜ், ஊராட்சி மன்றத்தலைவர் மோகனவல்லி ராஜசேகர், தாசில்தார் கண்ணாமணி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விவேகானந்தன் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உடுமலை வட்ட சட்ட பணிகள் குழுவினர் கலந்து கொண்டனர