அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை உறுப்பினர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்


அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை உறுப்பினர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்
x
திருப்பூர்


உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை உறுப்பினர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

ஒன்றியக்குழு கூட்டம்

உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நேற்றுகாலை அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன் தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் சண்முகவடிவேல், ஒன்றியக்குழு ஆணையர் ஜோதி, வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

அப்போது 23 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 24-வது தீர்மானமாக உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள சமையலறை கட்டிடங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த தீர்மானமும், அதைத்தொடர்ந்து 25-வது தீர்மானமாக ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடர்பாக பெயர் பலகை வைத்தல் தீர்மானம் பார்வைக்கு வைக்கப்பட்டது.

முன்பே தெரிவிக்க வேண்டும்

அதைத்தொடர்ந்து துறை ரீதியான அதிகாரிகள் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துக்கூறினார்கள். அப்போது கிராமங்களில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினை, சின்ன வீரம்பட்டி இந்திராநகர் இணைப்பு சாலை பணியை விரைவுப்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்துதல், சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும், 100 நாள் சம்பளத்தை தடையின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினர்கள் பேசினார்கள். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மலர்வழி பாபு, ஜெனார்த்தனன், திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் முருகன் உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story