உடுமலை நாராயணகவி பிறந்தநாள்


உடுமலை நாராயணகவி பிறந்தநாள்
x
திருப்பூர்


உடுமலை நாராயணகவி பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உடுமலை நாராயணகவி

திருப்பூர் உடுமலை தாலுகா பூளவாடியில் கிருஷ்ணசாமி முத்தம்மாள் தம்பதிக்கு கடந்த 25.09.1899- அன்று உடுமலை நாராயணகவி பிறந்தார். பொதுவுடமை, சமத்துவம், பெண்விடுதலை, சுயமரியாதை போன்ற முற்போக்கு சிந்தனைகள் கற்றறிந்தும், விடுதலை போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடைகள் தோறும் பாடினார்.

இவரது பங்களிப்பை பாராட்டி 1967-ம் ஆண்டு சங்கீத நாடக சங்கத்தின் சார்பில் சாகித்ய ரத்னா விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டு தமிழக அரசு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இவர் கடந்த 1981-ம் ஆண்டு பூளவாடியில் இறந்தார். அவரது நினைவை போற்றும் விதமாக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி கடந்த 2001-ம் ஆண்டு உடுமலை குட்டை திடலில் மணிமண்டபம் அமைத்து திறந்து வைத்தார்.

கலெக்டர் மரியாதை

அதைத்தொடர்ந்து மணிமண்டபம் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று உடுமலை நாராயணகவி பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை குட்டை திடலில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் சப்-கலெக்டர்கள் (பயிற்சி) கிர்திகா, விஜயன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவரும்,தெற்கு மாவட்ட செயலாளருமான இல. பத்மநாபன், உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன், நகரச்செயலாளர் வேலுச்சாமி, உடுமலை ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.எம்.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, செழியன் செந்தில்குமார், நகரமன்ற தலைவர் மத்தீன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழுத்துறை அமைப்பாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் யு.என்.பி.குமார், எம்.ஆர்.பாபு, உடுமலை ஆர்.டி.ஓ.ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம் மற்றும் உடுமலை நாராயண கவி குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story