திருச்செந்தூர் செல்ல உடுமலை ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்


திருச்செந்தூர் செல்ல உடுமலை ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்
x
தினத்தந்தி 28 Sept 2023 10:04 PM IST (Updated: 29 Sept 2023 10:38 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறை எதிரொலியாக உடுமலையில் இருந்து பாலக்காடு-திருச்செந்தூர் ரெயிலில் திருச்செந்தூர் செல்ல நேற்று உடுமலை ரெயில்நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.

திருப்பூர்

தொடர் விடுமுறை

உடுமலை ரெயில் நிலையம் வழியாக தென் மாவட்டங்கள் மற்றும் பல்வேறு பகுதிக்கு விரைவு பயணிகள் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் குறைவான செலவில் மனநிறைவான பயணத்தை பாதுகாப்புடன் பெற்று பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக முருகப்பெருமானுக்கு உரிய அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூருக்கு செல்லும் பாலக்காடு- திருச்செந்தூர் ரெயில் உடுமலை பகுதி பொதுமக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.

பவுர்ணமி, கோடை, பொது, வார விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு சென்று கடலில் குளித்து முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். அந்த வகையில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, மிலாதுநபி, காந்தி ஜெயந்தி என 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதி தொழிற்சாலை மற்றும் கோழிப்பண்ணை மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், திருச்செந்தூருக்கு செல்லும் பொதுமக்கள் ரெயிலில் பயணம் செய்ய நேற்று குவிந்தனர்.

பயணிகள் கூட்டம்

இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆனால் முன்பதிவு, தட்கல் மற்றும் முன்பதிவு இல்லாத பயணிச்சீட்டு வழங்குதல் என அனைத்து பணிகளுக்கும் ஒரு மையம் மட்டுமே உள்ளது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு வழியாக டிக்கெட் எடுத்துக்கொண்டு ரெயிலில் ஏறிச் செல்லலாம் என்று நினைத்திருந்த போதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏராளமான மக்கள் திரண்டதால் ரெயில் நிரம்பி வழிந்தது.

இதனால் ரெயிலில் ஏறிச்செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். திருச்செந்தூர-பாலக்காடு ரெயில் 20 பெட்டிகள் கொண்டதாக உள்ளது. அதனுடன் கூடுதல் பெட்டிகள் சேர்த்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அதேபோன்று கூடுதல் டிக்கெட் மையம் திறக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. எனவே தென்னக ெரயில்வே நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி ெரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்தும் மற்றும் உடுமலை ெரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் வழங்கும் மையத்தை திறந்து வைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story