திடீர் மழை
நடப்பு ஆண்டில் நிலவிய தட்பவெப்பம் மற்றும் பருவநிலை மாறுபாட்டால் வழக்கமாக பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்தது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகளும் வெப்பத்தை தணிக்க முடியாமல் பொதுமக்களும் அவதி அடைந்து வந்தனர். மேலும் நீராதாரங்கள் வற்றிப் போனதால் பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவியது.மேலும் கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடும் நிலவி வந்தது.
இதனால் மழை பெய்யாதா, சீதோசண நிலை மாறாதா என்று விவசாயிகளும், பொதுமக்களும் நாள்தோறும் மழைப் பொழிவை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதுமட்டுமின்றி விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி தென்னை மரங்களை காப்பாற்றியும் வந்தனர். அத்துடன் மழை வேண்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், வருண ஜெபம் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் நேற்று மாலை உடுமலை மற்றும் தளி பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் கருகும் நிலையில் இருந்த பயிர்கள் தற்காலிகமாக காப்பாற்றப்பட்டு உள்ளது.
மேலும் வாட்டி வதைத்த வெப்பத்தின் தாக்குதலும் ஓரளவுக்கு குறைந்து உள்ளது. மழைக்கு பின்பு வீசிய சில்லென்ற இதமான காற்றை பொதுமக்கள் அனுபவித்து மகிழ்ந்தனர்.நேற்று பெய்த மழை விவசாயிகளுக்கு ஆறுதலை அளித்தாலும் தீவிரமடைந்து நீராதாரங்கள் நிரம்புமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.