உடுமலையில் ஆலங்கட்டி மழை


உடுமலையில் ஆலங்கட்டி மழை
x
திருப்பூர்


உடுமலையில் நேற்று இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை வெயில்

உடுமலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகளும் வெப்பத்தை தணிக்க முடியாமல் பொதுமக்களும் போராடி வந்தனர். அதைத் தொடர்ந்து பழச்சாறுகள், தர்பூசணி, நுங்கு உள்ளிட்டவற்றை உணவாகக் கொண்டும் குளிர்சாதனங்களை பயன்படுத்தியும் பொதுமக்கள் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு முயற்சித்து வந்தனர்.

ஆனாலும் உடல் உஷ்ணம் குறைந்த பாடில்லை.இந்த நிலையில் உடுமலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் மழைப் பொழிவை எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

ஆலங்கட்டி மழை

இந்த சூழலில் நேற்று மாலை 4 மணியளவில் வானம் இருள் சூழ்ந்து திடீரென இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆலங்கட்டியை பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சேகரித்து மகிழ்ந்தனர். மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

மழைநீர் வடிகால் பராமரிப்பில் அலட்சியம் காட்டப்பட்டதால் கால்வாயில் தண்ணீர் செல்லாமல் சாலையில் செல்லும் சூழல் ஏற்பட்டது.கால்வாய்களின் தேங்கும் மண்ணை அகற்றாததே இதற்கு காரணமாகும் .இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

பருவமழைக்கு முன்பு உடுமலை நகரில் மழை நீர்வடிகால் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

மின்தடை

திடீரென பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சில்லென்ற காற்றுடன் கூடிய இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. ஆனால் மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.

இதேபோன்று தளி பகுதியிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் நிலையில் இருந்த பயிர்கள் காப்பாற்றப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story