உடுமலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி சனிக்கிழமையை யொட்டி நேற்று உடுமலை பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏழுமலையான் கோவில்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவில் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது.
இந்த கோவிலில் மூலவராக ஏழுமலை வெங்கடாசலபதியும் உற்சவராக சீனிவாச பெருமாளும், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அது தவிர கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
சிறப்பு பஸ்கள்
இந்த கோவில் வனவிலங்குகள் நடமாட்டம் நிறைந்த வனப்பகுதியில் உள்ளதால் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து பயபக்தியுடன் மலையேறிச்சென்று வரிசையில் நின்று ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தனர்.
அத்துடன் இயற்கையில் வனப்பகுதியில் விளைந்த பொருட்களை மலைவாழ் மக்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவற்றை பொதுமக்களும் ஆர்வத்தோடு வாங்கிச்சென்றனர். பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
உடுமலை கோவில்கள்
பக்தர்கள் பாதுகாப்பிற்காக வனத்துறையினர் மற்றும் அமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று உடுமலை பகுதியில் உள்ள உடுமலை திருப்பதி, பெரிய கடை வீதி நவநீதகிருஷ்ணன் கோவில் மற்றும் நெல்லுக்கடை வீதி சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைையயொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.