உடுமலை வாரச்சந்தையில் 11½ டன் கம்பிகள் மாயம்


உடுமலை வாரச்சந்தையில் 11½ டன் கம்பிகள் மாயம்
x
திருப்பூர்


உடுமலை வாரச்சந்தையில் பழைய கட்டிடத்தை இடித்ததில் 11½ டன் பழைய கம்பிகள் மாயமானது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உரிய பதில் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வாரச்சந்தை பழைய கட்டிடம் இடிப்பு

உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே ராஜேந்திரா சாலையில் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்ற வாரச்சந்தை உள்ளது. சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள், பழங்களை நாள்தோறும் ஏலத்துக்கு கொண்டு வருகின்றனர்.

அது தவிர வாரந்தோறும் திங்கட்கிழமை சந்தை வளாகத்தில் வாரச்சந்தையும் நடைபெற்று வருகிறது. வாரச்சந்தையின் போது காய்கறிகள் விற்பனைக்கு ஏதுவாகவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையிலும் வணிக கடைகள் கட்டப்பட்டது. அந்த கடைகள் பழுதடைந்ததால் இடித்து அகற்றப்பட்டு புதிதாக கடைகள் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

11½ டன் கம்பிகள் மாயம்

இந்த சூழலில் பழைய கடைகள் இடிக்கப்பட்ட போது அதன் தூண்கள், மேற்கூரையில் இருந்து எடுக்கப்பட்ட பல ஆயிரம் கிலோ கான்கிரீட் கம்பிகள் முழுவதும் மாயமானது. இது தெரிந்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.

இந்த நிலையில் நகராட்சியில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் 33-வது வார்டு உறுப்பினர் சி.வேலுச்சாமி கம்பிகள் மாயமானது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கேள்வி எழுப்பினார். அவருக்கு பதில் அளித்த நிர்வாகம் 11½ டன் கம்பிகள் மாயமாகி உள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது. ஆனால் கம்பிகளை எடுத்துச் சென்றது யார்? அது எங்கு விற்பனை செய்யப்பட்டது? அதன் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் எங்கு சென்றது? அதை யார் யார் பங்கு பிரித்து எடுத்துக்கொண்டனர் என்பதை நகராட்சி நிர்வாகம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.

பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை

மேலும் நிர்வாகத்தின் சார்பில் இதுவரையில் போலீசில் புகார் அளிக்கவும் முன்வரவில்லை. மாறாக கம்பிகள் மாயமானது குறித்து அறிக்கை அளிப்பதற்காக நிர்வாகம் 2 பேர் கொண்ட குழு அமைத்ததாக கூறப்படுகிறது. அதிலும் பொது நபர்களை நியமிக்காமல் நகராட்சி மன்ற உறுப்பினர்களே நியமிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே உடுமலை வாரச்சந்தையில் மாயமான கான்கிரீட் கம்பிகளை மீட்டு நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்து அதை முறைப்படி பொது ஏலம் விட வேண்டும். அதை எடுத்துச்சென்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் கூறுகையில் "பழைய கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகளை கட்டுவதற்கு ஒப்பந்ததாரரிடம் பணி ஒப்படைக்கப்பட்டு உள்ளது.பழைய கடைகளில் எடுக்கப்பட்ட கம்பிகள் சம்பந்தமாக நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படாது. அது முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரே சேரும். எவ்வளவு கம்பிகள் எடுக்கப்பட்டு உள்ளது என்ற விவரம் அறிவதற்காக 2 கடைகள் இடிக்காமல் விடப்பட்டு உள்ளது. அதை இடித்து அகற்றி கம்பிகள் கணக்கீடு செய்யப்பட்டு அதற்குரிய இழப்பீடு ஒப்பந்ததாரர் கணக்கில் பிடித்தம் செய்யப்படும். மேலும் இது குறித்து ஆய்வு செய்வதற்காக 2 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது" என்றார்.


Next Story