உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
100 ஆண்டுகளுக்கு பிறகு உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே உலகியநல்லூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பிறகு முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், இந்த கோவில் சிதிலமடைந்தது. இதனால் கோவிலில் அன்றாட பூஜைகள் கூட நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி பக்தர்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள், திருப்பணி உபயதாரர்கள், பொதுமக்கள், நன்கொடையாளர்கள் ஒன்று சேர்ந்து கோவிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 18-ந்தேதி விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. பின்னர் முதல் கால பூஜை நடந்தது. இதையடுத்து 19-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் நேற்று முன்தினம் 4 மற்றும் 5-ம் கால யாகசாலைபூஜை நடந்து, கோபுர கலசங்கள் வைத்தல், மகாதீபாராதனை, எண்வகை மருந்து சாத்துதல் உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேக நாளான நேற்று காலை 4 மணிக்கு நாடி சந்தனம், 6-ம் கால யாக சாலை பூஜை, நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
பின்னர் 7 மணிக்கு திருக்கயிலாய பரம்பரை தர்மபுர ஆதீனம் 27-வது மகா குரு மகா சன்னிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள், அவிநாசி ஆதீனம் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் மற்றும் ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம்புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து மூலவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து இரவு சாமி வீதிஉலா நடைபெற்றது.