உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை


உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 21 Jun 2023 6:45 PM GMT (Updated: 21 Jun 2023 6:45 PM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று வாரச்சந்தை நடந்தது. இந்த நிலையில் வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாட உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் வழக்கத்தை விட அதிக அளவில் விற்பனைக்காக தங்களது ஆடுகளை நேற்று வாரச்சந்தைக்கு கொண்டு வந்தனர். இந்த ஆடுகளை திண்டுக்கல், திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கினர். இதில் ஒரு ஆடு குறைந்த பட்சம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக இந்த வாரச்சந்தையில் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சத்துக்கு வரை ஆடுகள் விற்பனையாகும். அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் ஆடுகள் விற்பனையானது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது என்றார்.


Next Story