அங்கீகாரம் பெறாத வீட்டுமனை பதிவு விவகாரம்: குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க 4 வாரம் அவகாசம்- மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் கோரிக்கை
அங்கீகாரம் பெறாத வீட்டுமனை பதிவு விவகாரத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க 4 வாரம் அவகாசம் வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அங்கீகாரம் பெறாத வீட்டுமனை பதிவு விவகாரத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க 4 வாரம் அவகாசம் வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அங்கீகாரம் பெறாத வீட்டுமனை
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சரவணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், வீரபாண்டி பகுதியில் அரசின் அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை மோசடியாக விற்பனை செய்ததுடன், சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதனால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே முறைகேடாக பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அங்கீகாரம் பெறாத 31 ஆயிரத்து 625 வீட்டுமனைகள் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் 123 ஊழியர்களுக்கு மெமோ அளிக்கப்பட்டு உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீதான நடவடிக்கையில் தாமதம் ஏன்? என்பது குறித்து பத்திரப்பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி. ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
4 வாரம் அவகாசம்
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி. நல்லசிவம் ஆஜரானார். பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, மெமோ பெற்றவர்களில் பலர் உரிய பதில் அளிக்கவில்லை. அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க 4 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து இந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக அவ்வப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.