தினத்தந்தி செய்தி எதிரொலி:நீர்வரத்து வாய்க்கால் அடைப்பு அகற்றம் :ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
நீர்வரத்து வாய்க்கால் அடைப்பு அகற்றப்பட்டதால். ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியைடந்துள்ளனா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் வரும். இதற்கான நீர்வரத்து வாய்க்காலை, சிலர் அடைப்பு ஏற்படுத்தி, ஏரிக்குள் தண்ணீர் வர விடாமல் தடுத்து வைத்து இருந்தனர்.
இந்தநிலையில் தற்போது தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் குறைந்த அளவில் தண்ணீர் வரத்து உள்ளது. இந்த நீரை, பெரிய ஏரிக்கு கொண்டு வர முடியவில்லை. தனிநபர்கள் வாய்க்காலில் ஏற்படுத்தி இருந்த அடைப்பு காரணமாக, ஏரிக்கான நீர் வரத்து தடைப்பட்டு இருந்தது.
அதாவது, ஏரியில் குறைந்த அளவில் தண்ணீர் இருந்தால் தான் மீன்பிடிக்க முடியும் என்று கருதி, ஏரிக்கான நீர்வரத்தை தனிநபர் சிலர் தடுத்து வைத்திருப்பதாக விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதுபற்றி 'தினத்தந்தி' யில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், துரித நடவடிக்கை மேற்கொண்டு, வாய்க்காலில் இருந்த அடைப்பை அகற்றினர்.
இதன் பின்னர், தென்பெண்ணை ஆற்றில் இருந்து வாய்க்காலில் நீர் திறக்கப்பட்டது. இதனால் பெரிய ஏரியும் வேகமாக நிரம்பி, தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் பெரிய ஏரியை சார்ந்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்கள்.