15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.49 லட்சத்தில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி-பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு
15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.49 லட்சம் செலவில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.49 லட்சம் செலவில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது.
தரைமட்ட தொட்டிகள்
பொள்ளாச்சி நகராட்சி பகுதிக்கு அம்பராம்பாளையம் ஆழியாற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், அங்கு சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் 36 வார்டுகளில் 9 வார்டுகளுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதை தொடர்ந்து 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.49 லட்சம் செலவில் புதிதாக தரைமட்ட தொட்டி கட்டும் பணி நடைபெற்றது.
இதை தொடர்ந்து மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். விழாவில் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தளபதி முருகேசன், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் ஸ்ரீதேவி மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
2 நாளுக்கு ஒரு முறை குடிநீர்
அம்பராம்பாளையம் ஆழியாற்றில் இருந்து தினமும் 10.5 மில்லியன் லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதில் வழியோர கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி நகராட்சிக்கு 9.4 மில்லியன் லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 17,405 குடிநீர் இணைப்புகள் உள்ளன. தற்போது ஒரு நபருக்கு 103 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீரை மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஆனது.
இதன் காரணமாக 5, 6, 7, 8, 9, 11, 4, 10, 23 ஆகிய வார்டுகளுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.49 லட்சம் செலவில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட 2 தரைமட்ட தொட்டி கட்டப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நீரேற்ற வேண்டிய அவசியம் இல்லை. மேற்கண்ட வார்டுகளுக்கு இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படும். கூடுதலாக மின் இழுவை திறன் தேவைப்படுவதால் மின்மாற்றியுடன் கூடிய உயர் அழுத்த மின் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.