பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.

இந்த கல்வி உதவித் தொகைக்கு 2023-24-ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவ, மாணவிகள் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.

மேலும் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship-schemes என்ற இணையதள முகவரியில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2023-24-ம் நிதியாண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து மேற்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை 15.12.2023-க்குள் மற்றும் புதியது விண்ணப்பங்களை 15.1.2024-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story