ராமநாதபுரத்தில் ரூ.7½ கோடியில் பாதாள சாக்கடைக்கு புதிய குழாய்கள்


ராமநாதபுரத்தில் ரூ.7½ கோடியில் பாதாள சாக்கடைக்கு புதிய குழாய்கள்
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:45 PM GMT)

ராமநாதபுரத்தில் ரூ.7½ கோடியில் பாதாள சாக்கடைக்கு புதிய குழாய்கள் அமைக்கப்படும் என நகராட்சி கூட்டத்தில் தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ரூ.7½ கோடியில் பாதாள சாக்கடைக்கு புதிய குழாய்கள் அமைக்கப்படும் என நகராட்சி கூட்டத்தில் தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

குப்பைகள் அகற்றும் பணி

ராமநாதபுரம் நகராட்சி கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் அஜிதா பர்வீன், உதவி பொறியாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- கவுன்சிலர் குமார்:- நகரில் குப்பைகளை அகற்றும் பணியை தனியார் மயமாக்கி ரூ.50 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்காக எத்தனை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நகரில் ஆங்காங்கே பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து கழிவுநீர் அருகில் உள்ள நீர்நிலைகளில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது.

தலைவர்:- குப்பைகளை அகற்றும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது நகரில் 24 டன் அளவிற்கு குப்பைகள் சேருகிறது. ஆணையாளர்:- 112 தனியார் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட உள்ளனர். நகராட்சியில் 77 பணியாளர்கள் உள்ளனர். ஒரு டன் குப்பைக்கு ரூ.4 ஆயிரத்து 600 வரை கட்டணம் வழங்க அரசு அறிவுறுத்தி உள்ளது. குப்பைகளை அகற்றும் நிறுவனமே மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் உரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.7½ கோடியில்

தலைவர்:- பாதாள சாக்கடை குறைகளை சரிசெய்வதற்காக சிதம்பரம் பிள்ளை ஊருணி முதல் இந்திரா நகர் வரை ரூ.7½ கோடியில் பாதாள சாக்கடைக்கு புதிய குழாய்கள் அமைக்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். இந்துமதி முத்துலட்சுமி:- பாதாள சாக்கடை ஒரே இடத்தில் பலமுறை உடைப்பெடுத்ததாக பணி ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. உதவி என்ஜினீயர்:- ஒரே இடத்தில் உடைப்பு ஏற்படுவதில்லை. பாதாள சாக்கடை குழாய்கள் மண்ணில் புதைக்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டதால் உறுதிதன்மை இழந்து அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. தலைவர்:- பாதாள சாக்கடை உடைப்பு ஏற்படும்போது மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு உடனடியாக பழுது பார்க்கப்படுகிறது. அரசின் விதிகளுக்கு உட்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒரே ஒப்பந்ததாரருக்கு பணி வழங்குவதாக கூறுவது தவறானது.

சுற்றுச்சுவர்

குமார்:- இளங்கோவடிகள் தெருவில் முகம்மது சதக் சென்டர் பின்புறம் சாக்கடை கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. தலைவர்:- ராமநாதபுரத்தில் ரூ.5½ கோடி செலவில் 18 இடங்களில் வாருகால் அமைக்கப்படும். இதனால் மழைநீர் தேங்காது. நகராட்சி கழிவுநீரை வெளியேற்ற கூடுதலாக பம்பிங்க் ஸ்டேசன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரண்மனை சாலை வசந்தநகர் சந்திப்பில் சேதமடைந்த சாலை விரைவில் சீரமைக்கப்படும். டி.டி.விநாயகர் பள்ளி அருகில் கழிவுநீர் அகற்றப்படும். தனபாண்டியம்மாள்: 4-வது வார்டு அங்கன்வாடி கட்டிடத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். மதுரை வீராச்சாமி கோவில்தெரு கழிப்பறையை சீரமைத்து தரவேண்டும். நீலகண்டி ஊருணி வடகரையில் பேவர்பிளாக் அமைக்க வேண்டும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.


Next Story