சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர்


சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவுநீர்
x

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அருகே சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அருகே சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

பாதாள சாக்கடை திட்டம்

தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கரந்தை, வடக்கு வாசல், பள்ளிஅக்ரகாரம், மாரிக்குளம் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆள்நுழை குழிகள் மீது கான்கிரீட் மூடியும் போடப்பட்டுள்ளது.

கழிவுநீர் வெளியேற்றம்

ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. சில இடங்களில் அந்த குழிகள் மீது போடப்பட்டுள்ள மூடி உடைந்து விடுவதால் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இந்த நிலையில் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அருகே உள்ள ராஜீவ்நகர் வடக்கு தெருவில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது.

தொற்று நோய் பரவும் அபாயம்

வெளியேறும் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதுடன் அந்த பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளை சுற்றிலும் தேங்கி காணப்படுகிறது. இதனால் துர்நாற்றமும் வீசுகிறது.தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story