மின்ஒயர்களை பூமிக்கு கீழ் அமைக்கும் பணி- மின்வாரிய தலைவர் ஆய்வு

மின் ஒயர்களை பூமிக்கு கீழ் பதிக்கும் பணி நடைபெறுவதை மின்வாரிய தலைவர் ராஜேஷ்லக்கானி ஆய்வு செய்தார்.
மின் ஒயர்களை பூமிக்கு கீழ் பதிக்கும் பணி நடைபெறுவதை மின்வாரிய தலைவர் ராஜேஷ்லக்கானி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ன் கீழ் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
முதற்கட்டமாக மாடவீதியில் பே கோபுரத் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் சந்திப்பு பகுதி முதல் காந்தி சிலை வரையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மின்வாரியம் மூலம் மின்கம்பத்தின் வழியாக சென்ற மின்ஒயர்களை புதைவடமாக தரைக்கு அடியில் அமைக்கப்பட்டு வீட்டு மின் இணைப்புகளும் புதைவடமாக மாற்றும் பணி சுமார் ரூ.4 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றது.
இந்த பணியை நேற்று தமிழ்நாடு மின்வாரிய தலைவரும், மேலாண்மை இயக்குனருமான ராஜேஷ்லக்கானி நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மின்ஒயர்களை தரைக்கு அடியில் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
அப்போது அலுவலர்கள் இந்த பணிகள் 15 நாட்களுக்குள் நிறைவடையும் என்றனர். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் முருகேஷ், மின்வாரிய தலைமை பொறியாளர் ஜெயந்தி, மேற்பார்வை பொறியாளர் பழனிராஜ், செயற்பொறியாளர்கள் வெங்கடேசன், ஜெகன்நாதன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுநாதன், நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.






