பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்க வேண்டும்


பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்க வேண்டும்
x

பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்க வேண்டும்

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகை நகராட்சி கூட்டம்

நாகை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஆணையர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு பேசினர்.

இதன் விவரம் வருமாறு:-

தமயந்தி (அ.தி.மு.க.): நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கப்படுவது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடைகள் இணைப்பு இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. எனவே உடனடியாக பாதாள சாக்கடை இணைப்புகளை வழங்க வேண்டும்.

குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்

மணிகண்டன் (அ.தி.மு.க.): நாகை நகராட்சிக்குட்பட்ட சொக்கநாதர் கோவில் தெருவில் 500 மீட்டருக்கு உள்ளே தனியார் பள்ளி அருகே சுடுகாடு உள்ளது. 500 மீட்டர் துாரத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே கட்டிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும். அதை மீறி தனியார் பள்ளி கட்டிடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுதமன் (அ.தி.மு.க.): 13-வது வார்டு மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் குடிநீர் பிரச்சினையாலும், கழிவுநீர் வெளியேற சாக்கடை வசதி இல்லாமலும் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே ஆங்காங்கே சிண்டெக்ஸ் தொட்டிகள் அமைத்து, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். தெற்கு பால்பண்ணைச்சேரி, வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். மண்டப குளத்தை துார்வாரி, மக்கள் பயன்படுத்தும் வகையில் படித்துறை அமைத்து தர வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை

திலகர் (தி.மு.க.): சி.ஆர்.டி, கூக்ஸ் ரோடு, காமராஜர் காலனி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்விளக்கு எரியவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பைப் லைன் வேலையை விரைந்து முடிக்க வேண்டு்ம்.

ஞானமணி (தி.மு.க.): டாட்டா நகர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. கொடிமரத்து பூங்கா, தமிழ்நாடு ஓட்டல் உள்ளிட்ட பகுதிகளில் மின்விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இதனை சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.


Next Story