விழுப்புரம்- திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கலெக்டர் மோகன் உத்தரவு


விழுப்புரம்- திண்டிவனம் நகராட்சி பகுதிகளில்  பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்  கலெக்டர் மோகன் உத்தரவு
x
தினத்தந்தி 9 Oct 2022 6:45 PM GMT (Updated: 9 Oct 2022 6:46 PM GMT)

விழுப்புரம்- திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் விழுப்புரம்- திண்டிவனம் நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்திடும் வகையில் ஒப்பந்ததாரர்கள், அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இப்பணியின் மூலம் மழைக்காலங்களில் மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்குவதை தவிர்த்திடவும், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக வெளியேற்றிடும் வகையிலும் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியானது நகராட்சி பகுதிகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணிகளை விரைந்து முடிக்க

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அப்பணிகளை விரைந்து மேற்கொண்டு முடித்திட வேண்டும். பணிகள் நிறைவுபெற்ற இடங்களில் முறையாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். சாலையோரங்களில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்வதால் பணிகளை விரைந்து முடித்திடுவதோடு மட்டுமல்லாமல் சாலைகளில் மழைநீர் தேங்காதவாறு சாலைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்து வணிக நிறுவனங்கள், வீடுகளுக்கு முறையான கழிவுநீர் இணைப்பு வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அன்பழகன், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, தாசில்தார் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து விழுப்புரம் வழுதரெட்டி, பூந்தோட்டம் நகர், சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை கலெக்டர் மோகன் பார்வையிட்டு, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


Next Story