பாதாள சாக்கடை திட்ட ஆள்இறங்கு குழி சீரமைப்பு
பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள்இறங்கு குழி ‘தினத்தந்தி'யில் செய்தி வெளியானதை தொடர்ந்து சீரமைக்கப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள்இறங்கு குழி 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானதை தொடர்ந்து சீரமைக்கப்பட்டது.
'தினத்தந்தி' செய்தி
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.170 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி மூலம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராஜாமில் ரோட்டில் அமைக்கப்பட்ட ஆள்இறங்கு குழி சேதமடைந்து இருந்தது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதோடு, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் சேதமடைந்த ஆள்இறங்கு குழியை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
கழிவுநீர் வெளியேற்றம்
ராஜாமில் ரோட்டில் ஆள்இறங்கு குழி சேதமாகி இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து உடனடியாக அதிகாரிகள் அந்த குழியை சீரமைத்தனர். எனவே செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோன்று பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் அமைக்கப்பட்ட ஆள்இறங்கு குழி வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தூர்வாரி கழிவுநீர் வெளியே வருவதை தடுக்க வேண்டும். இதுபோன்று சேதமடைந்த குழிகளை கணக்கெடுத்து அவற்றை சரிசெய்த பிறகு திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.