'பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்'-3-வது வார்டு யூனியன் கவுன்சிலர் ஆர்.ஜி.மருது பாண்டியன் கோரிக்கை
பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என 3-வது வார்டு யூனியன் கவுன்சிலர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் கோரிக்கை விடுத்து உள்ளார்.
பனைக்குளம்,
பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என 3-வது வார்டு யூனியன் கவுன்சிலர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் கோரிக்கை விடுத்து உள்ளார்.
3-வது வார்டு கவுன்சிலர்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் 3-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆர்.ஜி.மருது பாண்டியன். இவர் ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார். குறிப்பாக மக்களுக்கு பணியாற்றிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பாரதிநகர் அருகாமையில் அலுவலகம் ஒன்றை அமைத்து அங்கு தினசரி பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டு வருகிறார்.
இதுகுறித்து கவுன்சிலர் ஆர்.ஜி.மருது பாண்டியன் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சிக்கு இணையாக பட்டணம்காத்தான் முதல் நிலை ஊராட்சி வெகுவாக வளர்ந்து வரும் பகுதியாக திகழ்ந்து வருகிறது. பட்டணம்காத்தான் ஊராட்சியின் மேற்கு பகுதியான பாரதி நகர், மருதுபாண்டியன் நகர், காலாங்கரை, ஓம் சக்தி நகர், ஜவகர் நகர், சேதுபதி நகர், மாவட்ட ஆட்சியர் வளாகங்கள் உள்ளிட்ட பகுதியை மாவட்ட மக்கள் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர்.
பாதாள சாக்கடை திட்டம்
இந்த நிலையில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடை திட்டம் வர வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களிடம் கோரிக்கை வைத்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தபோது, அவரிடம் பட்டணம்காத்தான் முதல் நிலை ஊராட்சியின் உண்மை தன்மைகளை தெரிவித்து பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அப்போது அவர் இந்த கோரிக்கையை ஏற்கும் வகையில் ராமநாதபுரம் நகராட்சி உடன் இணைத்து பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்த அரசாணை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்தத் திட்டம் கிடப்பில் உள்ளன. எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்திட போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சாலை வசதி
மேலும் பட்டணம்காத்தான் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் சாலைகள் பழுதடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் அம்மா பூங்கா ஒன்று சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. பூங்காவிற்குள் அறிவியல் பூங்கா என்ற பெயரில் இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம், சிறுவர்களின் பொழுது போக்கிற்கு சிறிய அளவிலான திரையரங்கம், நடைபயிற்சி உள்ளிட்ட வசதிகள் இருந்தன. தற்போது இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும்.
பட்டணம்காத்தான் ஈ.சி.ஆர். சாலை முதல் அச்சுந்தன்வயல் வரை மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்விளக்கு எரியாததால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசாரும் இரவு நேரங்களில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.